இங்கிலாந்தின் தொழில் சார்ந்த முக்கிய நகரங்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ளது சல்போர்ட் பகுதி. இந்த பகுதியின் குடோன் ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த உபகரணங்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அந்த உபகரணங்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரம் ஐரோப்பிய பவுண்டுகள்(இந்திய ரூபாயில் ரூ.1.5 கோடி), அதில் 80 ஆயிரம் முக கவசங்கள் கிடங்கில் பத்திரமாக இருந்துள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் 3 வண்டிகளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் இந்த கிடங்கிற்குள் புகுந்து 80 ஆயிரம் முக கவசங்களையும் கொள்ளையடித்தனர். திருடிய பொருட்களை கொண்டு வந்த வண்டிகளில் ஏற்றி அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றனர்.
இங்கிலாந்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் 80 ஆயிரம் முக கவசங்கள் கொள்ளை போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மான்ஸ்டர் நகரின் பாதுகாப்பு நிறைந்த முக்கிய பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் அந்த நகர போலீசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.