ரிசர்வ் வங்கி பணிக்கான எழுத்து தேர்வு! தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட மையங்கள்!

Photo of author

By Sakthi

இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக இந்திய அரசுக்கு சொந்தமானது இது இந்திய அரசின் கருவூலம் என்று சொல்லப்படுகிறது. நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதுடன் இந்த வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளையும் இயக்கி வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் பொது மக்கள் மற்ற வங்கிகளை பயன்படுத்துவதைப் போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த இயலாது. ஆனாலும் தன்னுடைய முகமை ஏற்று செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாகவுள்ள 950 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலமாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, என்று இரு கட்டங்களை கொண்டதாக இருக்கும்.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதன் பிறகு நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உள்ளிட்டவை நடைபெறும்.

முதல்நிலை எழுத்து தேர்வுக்கான மையம் தமிழகத்தில் சென்னை, நாமக்கல், சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், உள்ளிட்ட 8 நகரங்களில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. உத்தேசமாக எழுத்துத் தேர்வு வருகின்ற 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.