ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!!
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளதால், இப்போது முதலே தபால் வாக்குகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் மூத்த குடிமக்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கிராமம் ஒன்றில் ஒரு ஓட்டு கூட போட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் வேறு யாருமல்ல ஏகனாபுரம் கிராம மக்கள் தான். காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 624வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்களின் இரவு நேர அறவழி போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த மக்களவை தேர்தலை தாங்கள் புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தபால் வாக்கு பெறுவதற்காக சென்ற அதிகாரிகளிடம் வயதானவர்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் 18 தபால் ஓட்டு உள்ளது. ஆனால் இதில் ஒன்றை கூட பதிவு செய்யாமல் அக்கிராம மக்கள் அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் நடைபெற உள்ள தேர்தலில் அப்பகுதி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. இதற்கு அரசு உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என்பது தெரியவில்லை.