இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு!
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென தனி இடத்தை வைத்திருப்பவர் இயக்குனர் பேரரசு. இவர் தான் இயக்கும் படங்களுக்கு ஊரின் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைப்பார். அந்த வகையில் இவர் திருப்பாச்சி, திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இவர் இயக்குனர் மட்டுமின்றி, பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இதனால் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவரே பாடல்களை எழுதி இருப்பார். மேலும், இவர் மற்ற திரைப்படங்களுக்கும் பாடல் எழுதி உள்ளார். இவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை, வெளிநாட்டில் வாழ்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் அன்றாடம் செல்லும் உணவகம், துணிக்கடை, விமான நிலையம், ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அதிகமாக வட இந்தியர்களே வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் தமிழர்கள் பணியில் இல்லை என்பது வேதனையான விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கடைக்கு சென்றால் வாடிக்கையாளர்களை அங்குள்ள பணியாளர்கள் அன்போடு வரவேற்று பணிவோடு என்ன வேண்டும்? என்று விசாரிப்பது முக்கியமாக நம் தமிழர்களின் பண்பாடாக இருந்து வந்தது. இப்போது அந்த பண்பாடு புண்பட்டு இருக்கிறது. அதேபோல் உணவகம், தங்கும் விடுதி, விமான நிலையம் மட்டுமல்லாமல் பல பொது இடங்களிலும் இன்று தமிழ்நாட்டில் இந்த நிலைமைதான் உள்ளது என தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தி திணிப்பு வேண்டாம்! இந்தி திணிப்பு வேண்டாம்! என்று கூறி நாம் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களை திணித்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழில் பேச முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். குறைந்த சம்பளத்திற்கு வட இந்தியர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக நாம், நம் தமிழ்நாட்டை அவர்களுக்கு அடகு வைத்து விடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.