பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் ஓராண்டிற்கு பிறகு வைரலான வீடியோவால் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் நீலகிரியில் நடந்துள்ளது.
நீலகிரி பகுதியில் அண்மையில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், குன்னூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு சந்து போன்ற மறைவான இடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாலிகட்டியதும், அதனை மாணவி சிரித்தப்படி ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, தாலியை ஆடைக்குள் மாணவி மறைக்கும் காட்சி இடம்பெற்றது. வீடியோ வைரலான நிலையில் மாணவிக்கு தாலி கட்டியது தொடர்பாக விசாரிக்க மாவட்ட சமூக நலத்துறையினர் குன்னூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் குன்னூரின் சட்டன் பகுதியை சேர்ந்த 23வயதான கவுதம் என்பவனை கைது செய்தனர். அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததும், வைரலான தாலி கட்டும் வீடியோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதுமட்டுமின்றி, தாலி கட்டிய தகவல் அறிந்ததும் மாணவியை அவரது தந்தை நாமக்கலுக்கு அழைத்து சென்றதையும் கவுதம் போலீசரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கவுதமை கைது செய்த குன்னூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், நாமக்கல்லில் இருக்கும் மாணவியை மீட்டு காப்பகத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். ஓராண்டிற்கு முன்னதாக மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ வைரலாகவே, அந்த இளைஞர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டது.