கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!!
இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என யாருமே இல்லை. அனைவரும் உபயோகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானாவர்கள் ஸ்மார்ட் போன் தான் உபயோகப் படுத்துகிறார்கள். செல்போன் நமது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம். நாள் முழுவதும் வீடியோ பார்ப்பது, முகநூல் பக்கங்களை பார்ப்பது, கேம் விளையாடுவது என அதில் மட்டுமே நம்முடைய பொழுதை போக்குகிறோம். செல்போனில் சார்ஜ் இல்லையென்றாலும், சார்ஜ் போட்டுக் கொண்டே இத்தகைய வேலைகளை செய்கிறோம்.
இதனால் செல்போன் அதிக சூடாகி வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் அதை பெரிய விசயமாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் பெண் குழந்தை ஒன்று செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருக்கும்போது, செல்போன் வெடித்து அந்த குழந்தை இறந்தது.
அதே போன்று இளைஞர் ஒருவர் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கெனால் தெருவை சேர்ந்தவர் காமாராஜ். இவர் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கிறார்.இவர் மூலக்குளம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வேலை முடித்து தனது நண்பருடன் மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு, இரவு தனது அறைக்கு திரும்பியுள்ளார். அறைக்கு வந்த பிறகு தனது நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது செல்போனில் சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜை போட்டுக்கொண்டே மீண்டும் தனது நண்பர்களுடன் பேசியபடியே இருந்துள்ளார். அப்போது செல்போன் வழியே மின்சாரம் தாக்கி அவர் அலறியபடியே கீழே விழுந்துள்ளார்.
அவருடைய அலறல் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது அவர் மயங்கி கீழே விழுந்துள்ளது தெரிய வந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் காமராஜ் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.