கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்
அரியலூர் மாவட்டத்தில்தான் இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஐடிஐ முடித்து சென்னையில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து விசாவுக்காக ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் கொடூரமான முறையில் இறந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் வீட்டைச் சென்ற விக்னேஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் ஊருக்கு வெளியே தலையில் பலத்த காயம்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் நடந்த விசாரணையில் விக்னேஷ், தர்மராஜ் மற்றும் பிரபாகரன் ஆகிய நண்பர்கள் மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது பேச்சுவாக்கில் இந்திய அணியின் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை விக்னேஷ் கேலி செய்து பேசியுள்ளார். மேலும் அவர்களை தர்மராஜின் திக்குவாயோடு இணைத்து பேசியதால் தர்மராஜ் கோபமடைந்து, அவரை தாக்கிக் கொலை செய்துள்ளதாக ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிநாட்டில் நடிகர்களைப் பற்றி பேசிதான் முன்பெல்லாம் இதுபோல சண்டைப் போட்டு கொண்டிருந்தார்கள். இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கும் இது போல வெறித்தனமான ரசிகர்கள் உருவாகி இந்த கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.