அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விவகாரம் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு.! கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி!!
தமிழகத்தை கடந்த வாரம் உலுக்கிய அம்பாசமுத்திரம் டிஎஸ்பி விசாரணை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களை கொடூரமான முறையில் அவர்கள் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியது அம்பலம் ஆனது.
மேலும் டிஎஸ்பி பல்பீர் சிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தண்டனை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று அதன் அறிக்கை தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி டிஎஸ்பி பல்பீர் சிங் குறித்த முழு அறிக்கையை மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதில் நடந்த குற்றங்களை டிஎஸ்பி ஒத்துக் கொண்டதாகவும், இது குறித்து முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் சட்டமன்ற விவாதத்தின் போது இந்த பிரச்சனை குறித்து பெரும் புயலை கிளப்பவும் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, திட்டமிட்டுள்ளதாகவும் அதற்குள் ஒரு நிரந்தர முடிவை முதல்வர் எடுப்பார் என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.