தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியவற்றை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 400 வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் பணப்பட்டுவாடாவை கண்காணிக்கவும், ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுப்போரை கண்காணிக்கவும் வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் பே போன்ற ஆப்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினருக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உறவினர்கள் வீடு, திமுக திருவண்ணாமலை வேட்பாளர் எ.வ.வேலு, கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி என பல முக்கிய புள்ளிகளின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் செய்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் உள்ள தனலட்சுமி என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. தனலட்சுமி வீட்டில் நள்ளிரவு முதலே வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வரும் நிலையில், 87.5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனலட்சுமியின் மகன் ராஜேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை அடிப்படையாக கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.