பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை
சிம் கார்டு வாங்க பொதுமக்கள் கொடுத்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தி மோசடி கும்பலுக்கு பல லட்சம் ரூபாய்க்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த நபரை நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் நபர் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் சூர்யா என்ற நிறுவனத்தின் பெயரில் சோப்பு விற்பனை செய்த நபர்களிடம் சோப்பு வாங்கியுள்ளார்.அவர்கள் குலுக்கள் முறையில் பரிசு தருவதாக கூறி அவரிடம் சோப்பு விற்றவர்கள் பெயர் மற்றும் முகவரி தொலைபேசி எண் உள்ளிட்டவைகளை பெற்றுள்ளனர்.
பின்னர் சில தினங்களுக்கு பிறகு சூர்யா என்ற கம்பெனியிலிருந்து மேனேஜர் பேசுவதாக கூறி குலுக்கல் முறையில் தங்களுக்கு சோனி டிவி மற்றும் ஸ்கூட்டி பைக் ஆகியவை பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த பரிசு பொருட்களை அனுப்புவதற்காக டேக்ஸ் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்து அவரிடம் 36 ஆயிரத்து 550 ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு நீண்ட நாட்கள் ஆகியும் பரிசு பொருள் அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பின் அந்த வழக்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்தி பரிசு விழுந்துள்ளதாக கூறி ஏமாற்றிய நபர் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து மற்றும் அய்யனார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர்களை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் பலரிடம் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடம் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்வது போல் சென்று பரிசு கூப்பன் கொடுத்து குலுக்கல் முறையில் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பெற்று தொடர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் இந்த மோசடி சம்பவத்தில் பயன்படுத்துவதற்காக போலியான பெயரில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்தி அதிரடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்களும் கிடைக்கப்பெற்றது.
அதில் பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு போலியான ஆவணங்கள் பயன்படுத்திய சிம் கார்டுகள் பெற்றுள்ளதும், அதனை விற்பனை செய்தது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பதும், அவர் டிஜிட்டல் மொபைல் சிட்டி என்ற கடை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து தங்கராஜ் என்பரிடம் விசாரணை நடத்தியதில் அதிக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தொடர்ச்சியாக தனது கடைக்கு சிம் கார்டு வாங்க வரும் பொதுமக்களின் அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி போலியான சிம்கார்டுகள் பெற்று அதிக விலைக்கு மோசடி செய்யும் கும்பலுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து தங்கராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 150-க்கும் மேற்படி சிம்கார்டுகள் போலியான ஆவணங்கள் பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்து பல லட்ச ரூபாய் சம்பாதித்ததும் தெரியவந்தது. பொதுமக்கள் சிம்கார்டு வாங்க கொடுத்த ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தி டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்ட தங்கராஜை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.