சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு

0
179

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிப்பு

சின்ன தடாகம் ஊராட்சியின் மறு எண்ணிக்கையின் முடிவு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுக சௌவுந்தர வடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என நீதிபதி அறிவித்தார்.

இந்நிலையில் மூன்று முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தியும் வித்தியசமான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த போட்டி முடிவில் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 2554 வாக்குகளும், திமுக ஆதரவு பெற்ற சுதா 2551 வாக்குகளும் பெற்று 3 வாக்குகள் வித்தியாசத்தில் செளந்திரவடிவு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.

இதை எதிர்த்து திமுக ஆதரவு பெற்ற சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஜனவரி 24ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நீதிமன்றத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அறிவித்தபடி இன்று நீதிமன்றத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக சௌவுந்தர வடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த அறிவிப்பை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் 5375 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிமுக 2553 வாக்குகளும், திமுக 2551 வாக்குகளும் பெற்றுள்ளது. சுயேட்சையில் மல்லிகா 65 வாக்குகள் பெற்று உள்ளார்.
இதில் 206 வாக்குகள் செல்லாது. அதிமுக 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மூன்று முறை இதுவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்து இருப்பது அதிகாரிகளின் அலட்சியமான வேலையை குறிக்கிறது. மேலும் இந்த முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப் போது கூடுதலாக ஒரு வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.