வீட்டு முறையில் “பூஸ்ட்” செய்வது எப்படி? இந்த முறையில் செய்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்!!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பூஸ்ட் பிடித்த ஒன்றாக இருக்கிறது.இதன் டேஸ்ட் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டிருக்கிறது.இதில் சுவை அதிகம் என்றாலும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
எனவே இதனை கடையில் வாங்குவதை நிறுத்தி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அதே பூஸ்ட் டேஸ்டில் தயாரித்து பாலில் கலந்து பருகினால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் அதே சமயம் கடையில் வாங்குவதை தவிர்ப்பதால் பணமும் மிச்சமாகும்
தேவையான பொருட்கள்:-
*ராகி – 1 கப்
*ஜவ்வரசி – 1 தேக்கரண்டி
*கசகசா – 1 தேக்கரண்டி
*பாதாம் பருப்பு – 10
*பிஸ்தா பருப்பு – 10
*முந்திரி பருப்பு – 10
*ஏலக்காய் – 1
*பால் பவுடர் – 2 தேக்கரண்டி
*கொகோ பவுடர் – 2 தேக்கரண்டி
*பிரவுன் சுகர் – தேவையான அளவு
*உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ராகியை(ஆரியம்) கொட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.ராகியில் கல்,மண் கலந்து இருக்கும்.அதனால் அதை முறையாக சுத்தம் செய்வது அவசியம்.
சுத்தம் செய்த ராகியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற விடவும்.சுமார் 10 மணி நேரம் வரை ஊற வேண்டும்.
10 நேரம் கழித்து ராகியில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.ஒரு காட்டன் துணி எடுத்து அதில் ராகியை கொட்டி மூட்டை கட்டிக் கொள்ளவும்.2 நாட்கள் வரை அப்படியே வைக்கவும்.தினமும் காலை மற்றும் மாலை என்று இரு நேரம் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
பின்னர் மூன்றாவது நாள் ராகி கட்டி வைத்துள்ள மூட்டையை அவிழ்த்து நிழலில் நன்கு உலர விடவும்.ராகியில் சிறிதளவு கூட ஈரப்பதம் இருக்க கூடாது.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் உலர வைத்துள்ள ராகியை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு’மாறிக் கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் 10 முந்திரி பருப்பு,10 பாதம் பருப்பு,10 பிஸ்தா பருப்பு சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.பின்னர் அதில் 1 ஏலக்காய் சேர்த்து வறுத்து ஓரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் 1 தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து வறுக்கவும்.அவை பொரிந்து வந்ததும் அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.பின்னர் மீண்டும் 1 தேக்கரண்டி கசகசா எடுத்து கடாயில் போட்டு மிதமான தீயில் கருகி விடாமல் வறுத்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆற விடவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள ராகி,பருப்பு வகைகள்,ஜவ்வரிசி,கசகசா மற்றும் தேவையான அளவு பிரவுன் சுகர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்னர் அதில் 2 தேக்கரண்டி பால் பவுடர்,2 தேக்கரண்டி கொகோ பவுடர்,1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.அடுத்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளவும்.இந்த ராகி பூஸ்டை ப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.