பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு !
கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று பாகிஸ்தானிற்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினார். இது பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோஷமிட்ட அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கொடி பிடித்துச் சென்ற அவரது தோழியையும் கைது போலிஸ் செய்தது.
ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்களை பாகிஸ்தானிற்கு ஆதரவாக பாஜகவினர் சித்தரித்து வரும் நிலையில் தற்போது இந்த பெண் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டது அரசியல் ரீதியாகக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சார்பாக அவரது தந்தை மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
போலீஸார் இந்த சர்ச்சையில் சடட்ப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்ரீராம் சேனா எனும் அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் மராதி என்பவர் ’அமுல்யாவைப் போலிஸ் வெளியில் விட்டால் கொலை செய்துவிடுவேன். அவரைக் கொன்றால் 10 லட்சம் பரிசளிக்கப்படும்’ என அறிவித்துள்ளார். அவரது இந்த வன்முறைப் பேச்சுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.