மரத்தை கட்டிப்பிடிக்க 1500 ரூபாய் கட்டணம்..பெங்களூரில் ஒரு நூதன விளம்பரம்..!!

Photo of author

By Vijay

மரத்தை கட்டிப்பிடிக்க 1500 ரூபாய் கட்டணம்..பெங்களூரில் ஒரு நூதன விளம்பரம்..!!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் மன அழுத்தம், உடல் சோர்வு, நிம்மதியின்மை மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால் தவித்து வருகிறார்கள். இதற்கு ஒரே ஒரு தீர்வு குறைந்தது ஒரு நாளாவது நமது இயந்திர வாழ்க்கையை தவிர்த்து இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும். கிராமங்களில் இது சாத்தியம். ஆனால் நகர்ப்புறங்களில் சாத்தியமா? 

என்னதான் நகரங்களில் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் நேரத்தை செலவிட்டாலும், அந்த அளவிற்கு சிறந்த அனுபவமாக இருப்பதில்லை என்று கூறுகிறார்கள். இதனால் பெரும்பாலான இடங்களில் ஷின்ரின் யோகு என்ற ஜப்பானிய வனக்குளியல் முறை வரவேற்பை பெற்றுள்ளது. வனக்குளியல் என்பது காடுகள் வழியாக மெதுவாக நடப்பது தான். 

இதன்மூலம் மன அழுத்தம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு பெரிதாக செலவு இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இந்தியாவில் சில நிறுவனங்கள் இதையே ஒரு வியாபாரமாக்கி காசு பார்ப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று 1500 ரூபாய் கட்டணத்தில் மரங்களை கட்டிப்பிடித்து வனக்குளியல் செய்யலாம் என்று விளம்பரம் செய்துள்ளது. 

இதனை கண்ட பலரும் அந்நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மரங்களை கட்டிப்பிடித்து அதன் நிழலில் நேரம் செலவிடுவது நல்லது தான். ஆனால் பொது இடங்களில் இதை செய்வதற்கு கூட காசு கொடுக்க வேண்டுமா? எதையெல்லாம் வியாபாரமாக்குவது என்ற விவஸ்தை இல்லையா? என கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.