டிசம்பர் மாதத்தில் 2 லட்சம் மரணங்கள்! எச்சரித்த உலக சுகாதார அமைப்பு
கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையின் பாதிப்பு கடுமையாக உள்ளது.இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அந்த வகையில் இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரிக்கை தகவலையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஐரோப்பிய கண்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதிக்குள் மேலும் 2 லட்சத்து 36 ஆயிரம் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டெல்டா வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது.இதை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பால்கன்ஸ், கக்காசஸ், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் டெல்டா ரகத்தின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மரண எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மட்டுமே மேற்கூறிய பகுதிகளில் மரண எண்ணிக்கையானது 11 சதவீதம் அதிரித்துள்ளது. இதனையடுத்து டிசம்பர் துவக்கத்தில் 2 லட்சத்து 36 ஆயிரம்பேர் மரணம் அடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் தற்போது வரை 13 லட்சம்பேர் வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 53 உறுப்பினர் நாடுகளில் 33 நாடுகளில் மட்டுமே கடந்த இரண்டு வாரங்களில் மரண எண்ணிக்கையானது 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.அது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் மரண எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கிறது.
குறிப்பாக தடுப்புமருந்து பற்றாக்குறை காரணமாகவே இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல்வேறு நாடுகளில் கோடைகால சுற்றுலா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும் கொரோனா தொற்று அதிகரித்து பலர் மரணமடைகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக 6 சதவீத மக்களுக்கு தடுப்புமருந்து இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தான் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து பெருவாரியான நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட இந்நிலையில் மூடப்பட்ட சிறிய அறையில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தத்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.