டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!!
புகழ்பெற்ற பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவானது கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எப்பொழுதும் முடிவடையும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சவேரியார் பேராலய திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த விழா சுமார் 11 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆலயமானது சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடு இன்றி அனைத்து வகை மக்களையும் ஈர்த்து வருகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவினை கண்டுகளிக்க ஆலயத்தில் கூடுவது வழக்கம். நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை திருவிழா நடைபெற்றாலும் இறுதி நாளான டிசம்பர் 4-ஆம் தேதி காலை 6:00 மணி அளவில் பெருவிழா திருப்பலி, அதையடுத்து 8 மணிக்கு மலையாள திருப்பலி, அதற்கடுத்ததாக காலை 11 மணி அளவில் தேர் பவனியும், மாலை 7 மணியளவில் தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவையும் சிறப்பாக நடைபெறும்.
இதற்காக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவின் இறுதி நாளன்று நடைபெறும் திருப்பலியில் கலந்து கொள்வர். இதன் காரணமாக கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு அவரின் அருளைப் பெற வருகின்ற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 16-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.