50 கடைகள் மொத்தமாக எரிந்து சாம்பல்!! தீ விபத்தால் பரபரப்பு!!
திருப்பூர் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது பனியன் தான். பனியன்களுக்கு பெயர் போன இடமாக திருப்பூர் மாவட்டம் கருதப்படுகிறது. இங்கு காதர்பேட்டையில் 50 கடைகள் செயல்பட்டு வருகிறது.
திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி இங்கு விற்பனை செய்து வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ஆடை ரகங்களும் இங்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு ஆடைகளை வாங்கி செல்வார்கள். இதனால் இந்த பனியன் பஜார் சந்தை காலை முதல் இரவு வரை எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.
அந்த வகையில் நேற்று இரவு கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இரண்டு காவலாளிகள் அப்பகுதியில் காவலுக்கு இருந்தனர். அதன் பிறகு திடீரென ஒரு கடையில் தீப்பற்றி எரிந்தது.
இதை பார்த்த காவலாளிகளும் பொது மக்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. இவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. 10 நிமிடங்களுக்குள் தீ மற்ற 50 கடைகளுக்கும் பரவி எரிய ஆரம்பித்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்தனர்.
50 கடைகளிலும் மொத்தமாக ரூ.3 கோடி மதிப்புள்ள ஆடைகள் தீயில் எரிந்து கருகியது. இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.
வியாபாரிகளும், பணியாளர்களும் இதை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு, வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறி உள்ளனர்.