குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது!
தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கம்பம் தாத்தப்பன்குளத்தை
சேர்ந்த சாதிக்அலியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உணவுப்பொருள்
கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி அவரை குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவிட்டார்.
இதேபோல், போடியில் முன்னாள் ராணுவ வீரரும், தங்கும் விடுதி உரிமையாளருமான
ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த மாதம் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய
கலெக்டருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில், இந்த வழக்கில் தொடர்புடைய போ. மல்லிங்காபுரத்தை சேர்ந்த மனோகரன், திண்டுக்கல் மாவட்டம் எம். வாடிப்பட்டியை சேர்ந்த மதன்குமார்,போ. ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ், அவருடைய மகன் யுவராஜ், போடி திருமலாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து, அவருடைய மகன் மனோஜ்குமார் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவிட்டார்.
மேலும், தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து என்பவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.