கடலூரில் 8 டன் அளவுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களை தடை விதித்துள்ளது. இருந்தாலும் இவைகள் கடைகளில் அதிக விலை கொடுத்து விற்கப்படுகிறது. எனினும் இது முழுமையாக தடை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடலூரில் கே.என் பேட்டை பகுதியில் உள்ள திருப்பதி நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பான் புகையிலை போன்றவைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ.அபினவ் உத்தரவின் பேரில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் க.சாந்தி தலைமையில் இன்று அந்த வீட்டில் விசாரணை செய்து சோதனை மேற்கொண்டது.
அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த வீட்டிற்குள் மூட்டைகளாக டன் கணக்கில் குட்கா புகையிலை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அங்கு விசாரணை நடத்திய பின் அங்கிருந்த போதைப் பொருட்கள் 7.75 டன் அளவிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாய் ஆகும். இதில் 30 கிலோ கஞ்சா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை பை செய்யப்பட்ட போதை பொருட்கள் அனைத்தையும் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையிடம் வழங்கப்பட்டது. இதனை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அவர்கள் தனியாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில் குற்றவாளியாக கணிசப்பாக்கம் சேர்ந்த பாரதி என்பவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததன் அடிப்படையில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் சோதனை நடத்தியபோது குற்றவாளி பாரதி தலைமறைவாகினர். தற்போது அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.