வெள்ளியங்கிரியில் நடந்த 8வது பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அச்சத்தில் பக்தர்கள்..!!
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி கோவில். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவாக சிவபெருமான் இருக்கும் இதனை தென் கயிலாயம் என்று அழைப்பார்கள். இந்த சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டும் இங்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
வெள்ளியங்கிரி மலையேறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. வழுக்கும் பாறைகள், ஆபத்தான பாதைகள் என ஏழுமலைகளை கடப்பது அவ்வளவு கடினம். அதைவிட முக்கியம் இதை கடப்பதற்கு உடல் வலிமையும், மன வலிமையும் இருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே சிவபெருமானை தரிசிக்க முடியும்.
ஆனால் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பலியாவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 7 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து இங்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி முழு மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே மலையேற வேண்டும். தனி நபராக அல்லாமல் குழுக்களாக மட்டுமே செல்ல வேண்டும் என கூறியது. அதன் பின்னரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு தனது நண்பர்களுடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட வீரக்குமார் என்ற இளைஞர் மலையில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.