உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

0
103

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என்று இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அதில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகளும் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்த சில ஊர்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, 9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.

அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இதில் விடுபட்டு இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது பல காரணங்களை முன்வைத்து தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

சமீபத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருக்கிறது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்த சூழ்நிலையில், மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்திருக்கிறது.

Previous articleபரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக் வரவேற்ற அமைச்சர் மா சுப்பிரமணியன்!
Next articleஇந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி!