ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்! தேனியை கலக்கும் தம்பதியினர்!
தேனி மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தில் வசித்து வரும் சலீமா – சையது முகம்மது தம்பதியினர் பெட்டி தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தி ஆண்டொன்றுக்கு 20 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே அமைந்துள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர் சலீமா – சையது முகம்மது தம்பதியினர். இவர்கள் தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தி ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளாக பெட்டி தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து தொழில் நடத்தி வரும் இவர்கள் தொடக்க காலத்தில் தங்களுக்கு உள்ள தென்னந் தோப்பில் தேங்காய் நன்றாக விளைச்சல் பெற வேண்டும் என்று ஒரு சில பெட்டிகளில் பெட்டி தேனீ வளர்த்து வந்துள்ளனர். பெட்டி தேனீக்களின் தேன் உற்பத்தி செய்யப்படும் நுட்பத்தை தெரிந்து கொண்ட சலீமா – சையது முகம்மது தம்பதியினர் இதனை பிரதான தொழிலாக மாற்றியுள்ளனர்.
பள்ளப்பட்டியை சுற்றியுள்ள கிராமப் பகுதி முழுவதும் தங்களுக்கு தெரிந்த இடங்களில் ஆங்காங்கே பெட்டி தேனீக்களை வைத்து தேனை உற்பத்தி செய்து வருகின்றனர். பள்ளப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வருகின்றனர்.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு சராசரியாக 10 டன் வரை தேனை உற்பத்தி செய்து அதனை தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து ஆண்டொன்றுக்கு 20 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இது பருவ காலத்தை பொறுத்து வருமானம் மாறுபடும் எனவும் கூறுகின்றனர். இந்திய தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து அதனை இயந்திரங்களால் தேனை பிழிந்து எடுத்து முருங்கைத் தேன், நெல்லி தேன், இஞ்சி தேன், மலைத்தேன், தேன் மகரந்தத் தூள், தேன் சோப்பு உள்ளிட்ட வகைகளாக பிரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். மேலும் தேனீக்கள் வளர்ப்பதற்கான பெட்டிகள், தேன் எடுப்பதற்கான பிரத்தியோக ஆடைகள், பெட்டியுடன் தேனீக்கள் என தேனீக்கள் சம்பந்தப்பட்ட பொருள்களையும் விற்பனை செய்து வருகின்றனர். பெட்டி தேனீக்களை 2,500 முதலும், தேன் 250 முதலும் விற்பனை செய்து வருகின்றனர்.