இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்!
பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அந்த நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றுதான் மஞ்சள் பை திட்டம். பிளாஸ்டிக் பைகளை மக்கள் உபயோகிப்பதை தவிர்க்கும் விதத்தில் இந்த மஞ்சள் பை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமின்றி அனைத்து கிராம மற்றும் நகரங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என மக்கள் தனித்தனியாக பிரித்து போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவ்வாறு பிரிப்பதன் மூலம் மறுசுழற்சி செய்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் தூய்மை பாரதம் என்ற இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்குவது தான் முதலாய கடமை. இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயண தேவன் பட்டியில் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதில் பொதுமக்கள் கொண்டுவரும் குப்பைகளுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அன்றாடம் தனது வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை , மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து கொடுப்பவருக்கு ஊராட்சி சார்பில் ஒரு கிலோவிற்கு ரூ.8 ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
குப்பை கொடுத்தால் துட்டு கிடைக்கும் என்பதால் மக்கள் குப்பைகளை வெளியே போடாமல் தனித்தனியாக பிரித்து அங்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த கம்பம் ஊராட்சி மிகவும் சுகாதாரமாக காணப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் பேசியதாவது, இத்திட்டத்தின் மூலம் ஊராட்சி மூலம் எட்டு ரூபாய் வழங்குவதால் தெருகளில் ,சாலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் போடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.குப்பைக்கு துட்டு என்ற பெயரில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும், பணம் கிடைப்பதால் குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் ஆர்வத்துடன் சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கின்றனர். இதனால் எங்கள் கிராமம் பிளாஸ்டிக்கில்லா கிராமமாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.