தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துக்குட்டி 50 வயது மதிக்கத்தக்க இவர் சொந்தமாக வேன், மினி லாரி, உள்ளிட்டவற்றை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா 20 வயது மதிக்கத்தக்க இவர் கோவில்பட்டியில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே உரைச் சார்ந்த வடிவேல் என்பவரின் மகன் மாணிக்கராஜ் 26 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழில் செய்து வருகின்றார். உறவினர் மாணிக்கராஜ் என்பவரும், ரேஷ்மாவும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களது காதல் விவகாரம் முத்துக்குட்டிக்கு தெரிய வந்தவுடன் தன்னுடைய மகளின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் வேறு இடத்தில் வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்ற மாதம் 29ஆம் தேதி காதலர்கள் இருவரும் தங்களுடைய ஊரிலிருந்து வெளியேறி மதுரையில் இருக்கின்ற உறவினர் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ,2 நாட்களுக்கு முன்னர் புதுமன காதல் தம்பதி இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வருகை தந்தனர்.
அங்கே மாணிக்கராஜின் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில் நேற்று தம்பதியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். மாலை சமயத்தில் வேலை முடிவடைந்த உடன் மகாலட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அந்த சமயத்தில் வீட்டில் அவருடைய மகன் மாணிக்கராஜும், மருமகள் ரேஷ்மாவும், அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனை கண்டு அதிர்ந்து போன மகாலட்சுமி கதறி அழுதார்.
இது தொடர்பாக எட்டயபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளாத்திகுளம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயபுரம் காவல்துறை ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வர வைத்து தடயங்களை சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதியின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துக்குட்டி ஆத்திரத்தில் தன்னுடைய மகள், மருமகன், என்று கூட பாராமல் அவர்களை அறிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த பயங்கர இரட்டைக்கொலை தொடர்பாக எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துக்குட்டியை வலை வீசி தேடி வந்த நிலையில், முத்துக்குட்டியை காவல்துறையினர் கைது செய்தார்கள்.
திருமணமான 26 நாளில் புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையை வெட்டி கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.