செஸ் ஒலிம்பியாட் போட்டி! 2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!

0
105

2 நாள் பயணமாக நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமரின் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றுக் கொள்கிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் ஆய்வு செய்தார்கள்.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

அகமதாபாத்திலிருந்து தனி விமான மூலமாக நாளை மறுநாள் மாலை 4.45 மணியளவில் சென்னை வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ என் எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார். அதன்பிறகு கார் மூலமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கின்றார்.

செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று விட்டு கார் மூலமாக ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இரவில் ஆளுநர் மாளிகையிலேயே தங்குகிறார்.

இந்த நிலையில், பிரதமர் 29ஆம் தேதி காலை 10 மணியளவில் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் சென்று அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

அதன் பின்னர் பட்டமளிப்பு விழா முடிவடைந்த பிறகு சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் அங்கிருந்து மீண்டும் அகமதாபாத் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜி குழுவைச் சார்ந்த 60 பேர் சென்னை வந்திருக்கிறார்கள்.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து விமான நிலையம் நேரில் விளையாட்டு அரங்கம் அண்ணா பல்கலைக்கழகம் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஐ என் எஸ் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

அதோடு சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருக்கிறது.

விமான நிலையத்திற்கு அனுமதி இன்றி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 29ஆம் தேதி மாலை வரையில் அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.