சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

0
153
Tv Actress Chitra
Tv Actress Chitra

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதாலும், சித்ராவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்த ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது தற்கொலை தான் என்றும் ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.