எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள்
மூன்று நாள் பயணமாக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அங்கிருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் மீண்டும் கோவையில் நடக்கும் கல்லூரி நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்தது முதல் அங்கு திமுக அதிரடியாக செயல்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் இன்று மாலை கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவதாக கூறப்படுகிறது.
கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதி எப்பவுமே அதிமுகவின் கோட்டை என்றே கருதப்படுகிறது.இதை உறுதிப்படுத்தும் வகையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அமைந்தது.தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக மேற்குறிப்பிட்ட கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளில் கூட வெற்றியை பெற முடியவில்லை.
கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு கிடைத்த தோல்வி என்பது அக்கட்சியினராலே எதிர்பார்த்தது தான் என்றாலும் அதே நிலை மேலும் தொடரக்கூடாது என்று முடிவு செய்த கட்சி தலைமை தீவிரம் காட்ட ஆரம்பித்தது.அந்த வகையில் கோவையில் கட்சியை வளர்க்க பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தது.அதுமட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பு திட்டங்களை ஆரம்பித்து கோவை மக்களின் மனதை கவரும் வேலையில் திமுக இறங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதை உறுதி செய்யும் வகையில் தான் ஏற்கனவே நடந்த உதயநிதி ஸ்டாலின் பயணம் மற்றும் இப்போதைய ஸ்டாலினின் பயணமும் அமைந்துள்ளது.ஒரு பக்கம் அரசு திட்டங்கள் மூலமாக மக்களை கவர நினைக்கும் திமுக மறுபுறம் அரசியல் எதிரியான அதிமுகவை கொங்கு மண்டலத்தில் பலவீனப்படுத்தும் வேலையிலும் இறங்கியுள்ளது.இதை உறுதி செய்யும் வகையில் தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டு வந்த கொங்கு பகுதியை சேர்ந்த எஸ்.பி.வேலுமணியின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருமுறை சோதனைகளை நடத்தியது. இதனைத்தொடர்ந்து விரைவில் அவர் தகுந்த ஆதாரங்களுடன் சிக்குவார் என்று காவல்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்தன.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 11 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற தலா ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்தன. அந்தவகையில் இதில் பெரியளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையை முடித்த அந்த குழு முழு ரிப்போர்ட்டை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரோடு நெருக்கம் பாராட்டிய அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என பெரிய புள்ளிகள் இருக்கும் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வரின் இந்த கோவை பயணம் முடிந்தவுடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைகளை குறி வைத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது.