தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும். வடதமிழகம், ஆந்திர கடலோர பகுதிகளான தென்மேற்கு, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 6 செ.மீ மழையும், பொன்னேரி மற்றும் பேரையூரிலும் 4 செ.மீ மழை பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.