இரண்டு பெண்கள் படுகொலை: காளான் பறிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்!
ஜெயங்கொண்டம் அருகே பட்ட பகலில் இரண்டு பெண்களை கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி, மலர்விழி ஆகியோர் கடந்த 23ஆம் தேதி அங்குள்ள தைலமரக்காட்டில் காளான் பறிக்க சென்றுள்ளனர். அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அவர்களை தேடிச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் மற்றும் அவர்களின் நகைகள் திருடு போனதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஜெயம்கொண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடத்திய போது, நாய்கள் தைல காட்டை அடுத்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கழுவன்தோண்டி கிராமத்தில் வசிக்கும் பால்ராஜ் என்பவரின் வீட்டின் முன் நின்றுள்ளது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பால்ராஜை முதற்கட்ட விசாரணை செய்தபோது அவர்கள் அணிந்திருந்த நகைக்காக படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணையை தீவிர படுத்திய போது பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காட்டுப்பன்றி, முயல் வேட்டையில் ஈடுபடும் பால்ராஜ் கடந்த 23ஆம் தேதி வேட்டைக்காக தைல தோப்பிற்கு சென்றுள்ளார். அங்கு புதரில் காளான் பறித்து கொண்டிருந்த மலர்விழியை காட்டுப்பன்றி என நினைத்து சுளுக்கியால் தாங்கியுள்ளார் வலி தாங்க முடியாமல், மலர்விழி உறவினர்களுக்கு சொல்ல போன் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் மலர்விழியை ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தடுக்க வந்த கண்ணகியையும் வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் கொலை சம்பந்தமாக வேறு யாரேனும் தொடர்பு உள்ளவர்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.