சாலையோரத்தில் குப்பையாக கிடந்த வாக்கு சீட்டுகள்! பெரம்பலூரில் பரபரப்பு! நடந்தது என்ன?
பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சியில் சாலை அருகே வாக்கு முத்திரை குத்தப்பட்ட வாக்கு சீட்டுகள் குப்பையாக இருந்ததால் அங்கு பரபரப்பு உண்டாகியுள்ளது.
மேலமாத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மணிவண்ணன் என்பவர் பூட்டு சாவி சின்னத்திலும், கந்தசாமி என்பவர் உருளை சின்னத்திலும், மகேஷ்குமார் என்பவர் ஏணி சின்னத்திலும், தேவகி நாராயணசாமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட மணிவண்ணன் என்பவர் 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, சாலையோரம் கிடந்த வாக்கு சீட்டுகளில் ஆட்டோ சின்னம் மற்றும் உருளை சின்னத்தில் வாக்குகள் குத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தோல்வியடைந்த மற்ற வேட்பாளர்களுக்கும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கேள்விப்பட்டதும் அங்குமக்கள் கூட்டம் வரத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முழு பாதுகாப்புடன் நடந்தபோதும் சாலையோரத்தில் வாக்கு சீட்டுகள் எப்படி வந்தது என காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. விசாரணையில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.