மாஜி அமைச்சர்: வங்கி கணக்கு திறந்தால் தான் பொங்கல் பரிசு! 1 மாதத்தில் இது எப்படி சாத்தியம்?
திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்த விலைவாசி உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் தொண்டர்களுடன் சேர்ந்து சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
பின்பு அவர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது கொரோனா காலகட்டத்திலும் மக்களுக்கு பொங்கல் பரிசை தவறாமல் வழங்கியதோடு, அவரவர் வீடுகளுக்கு சென்று அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கினர்.
ஆனால் தற்பொழுது திமுக ஆட்சி வந்தது முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு என்பதே கிடையாது. தற்பொழுது திமுக பொங்கல் விழாவை முன்னிட்டு மக்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அவ்வாறு வழங்கப்படும் பணத்தை மக்களின் கைகளில் நேரடியாக வழங்காமல் வங்கி கணக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தை அட்டை காரர்களுக்கும் கூட்டுறவு வங்கியின் மூலம் கணக்கு திறந்து ஓரிரு மாதங்களுக்குள் பொங்கல் பரிசு போடுவது என்பது சாத்தியமற்றது. தற்பொழுது வரை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூட வெளியிடவில்லை எனவே இம்முறையும் மக்களுக்கு பொங்கல் பரிசு தராமல் ஏமாற்றும் அரசாக தான் திமுக இருக்கப் போகிறது. எனவே இந்த அரசை புறக்கணித்து மக்கள் கூடிய விரைவிலேயே இதனை வீட்டிற்கு அனுப்பி வைப்பர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.