கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!
காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணி விவகாரம் சமீப நாட்களாக சர்ச்சையாக இருந்து வந்தது. பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்கட்சி கூட்டத்தினை காங்கிரஸ் நடத்திய டெல்லி மாநாட்டில் திமுக கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து, திமுக கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுக, காங்கிரஸ் இடையே சர்ச்சை வெடித்தது. திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரசை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பதுபோல் அவரது பேட்டியில் கூறினார்.
காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என டி.ஆர்.பாலு கூறியதும் இரு கட்சியினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சினை குறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சி தன்மானத்துடன் செயல்பட வேண்டும் என்று போடு போட்டார். அதன் விளைவே இன்று ஸ்டாலின் பொதுவில் பேசும் அளவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்டாலின் வெளிட்ட அறிக்கையில் கூறியதாவது:
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும், திமுகவின் முடிவுகளுக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும் இனி கருத்து வேறுபாடு என்கிற பேச்சுக்க இடமில்லை என்பது போல கே.எஸ்.அழகிரி தன்னை சந்தித்து பேசி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
திமுகவின் கூட்டணி குறித்து பொதுவில் யாரும் எந்த கருத்தும் கூற வேண்டாம் என்றும், திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று சிலர் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்த காத்திருக்கின்றனர். எந்த விமர்சனத்திற்கும் இனி இடம் கொடுக்க வேண்டாம் அதை நான் துளியும் விரும்பவில்லை எனவும் அறிக்கையில் கூறியுள்ளார்.