தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்படும்.

0
73

தஞ்சை குடமுழுக்கு: தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும்
நடத்தப்படும்.

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு நீண்ட காலமாக சமஸ்கிருத்மொழியில் நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதைப்போலவே, கோயிலின் ஆகம விதிப்படி குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என்று மயிலாப்பூர் ரமேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வக்கீல், தஞ்சை கோயிலின் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் நடத்தப்படும் என்றும், நிகழ்வின் போது தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் மந்திரங்கள் ஓதப்படுவதுடன் எல்லா சாதி அர்ச்சகர்களும் குடமுழுக்கில் மந்திரம் ஓத வாய்ப்பு அளிப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து, இந்து சமய அற நிலையத்துறை குடமுழுக்கு சம்பந்தமாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், குடமுழுக்கை தடைசெய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குடமுழுக்கு சம்பந்தமான மற்ற வழக்குகள் நாளை விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தனர். குடமுழுக்கு நிகழ்வில் சாமிக்கு தமிழில் சிறப்பு வழிபாடுகளும், சமஸ்கிருதத்தில் வேதம் குறித்த மந்திரங்கள் ஓதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.