தமிழக அரசை விமர்சித்த ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு! இயலாமையில் ஸ்டாலின் புலம்புவதாக அமைச்சர் பேட்டி!!
தமிழக அரசின் சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த காரணத்தால், மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து நல்லாட்சி விருதுகளை பெற்றிருந்தது.
இந்த விருதினை விமர்சிக்கும் விதமாக ஸ்டாலின் கொடுத்த பேட்டி ஒன்று முரசொலியின் வாயிலாக கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மேலும், விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுகவின் மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பேட்டி அளித்திருந்தார்.
தமிழகத்தின் நல்லாட்சி விருது விமர்சனம் மற்றும் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் அவதூறு கருத்து கூறியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதி ஒருவழித்தட சாலையை இருவழி சாலையாக மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பின்னர், நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசியிருப்பது அவரது இயலாமை மற்றும் நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக கூறினார்.