விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தவலசா மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இது போன்ற விடுதியில் தங்குவது வழக்கம் தான். அந்த வகையில் அங்கு செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர்.
அந்த மாணவிகளுக்கு வழக்கம் போல் காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்டு சிறுது நேரம் ஆனதும் மாணவிகள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.அதனை கண்ட சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி விரைந்து வந்த விடுதி நிர்வாகிகள் மாணவிகளை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அவர்களின் ஆறுக்கும் மேற்பட்ட மாணவிகள் மேல் சிகிச்சைக்காக சுருங்கவரப்பு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் 14 மாணவிகள் குணமடைந்துள்ளனர். மீதம் இருக்கும் பத்து மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனையடுத்து மாணவிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக விடுதி வார்டன் கூறியுள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.மேலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வின் முடிவில் மாணவிகளுக்கு சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.