ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் இந்த ஆன்லைன் ரம்பி தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.