அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்!
4 மாவட்ட பகுதிகளில் தொல்லை செய்து வந்த காட்டு யானை 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ராஞ்சி பகுதிகளில் உள்ள 4 மாவட்டங்களில் இந்த காட்டு யானை பெரும் அட்டகாசம் செய்து வருகிறது.
ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி மாவட்ட பகுதிகளில் 16 பேர் கடந்த 12 நாட்களில் அந்த யானையின் தாக்குதலுக்கு கொடூரமான முறையில் பலியாகி உள்ளனர்.
ராஞ்சி மாவட்டத்தைச் சார்ந்த வனத்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் பற்றி கூறும் பொழுது,
ராஞ்சி மண்டல வனப்பகுதியில் சுமார் ஐந்து பேர் யானை தாக்குதலில் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் காட்டு யானை கண்ட பொதுமக்கள் அதை சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தும் கூச்சலிட்டும் கொண்டு இருந்த பொழுது யானை துரத்தி கூட்டத்தில் இருந்த ஒருவரை யானை தாக்கி கொன்றது.
யானைகளை யாரும் நெருங்க வேண்டாம். காலை மற்றும் மாலை வேளைகளில் யானை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். இது போன்ற எச்சரிக்கைகளை பொதுமக்கள் யாரும் பின்பற்றாததால் மேற்கண்ட உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன.
பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டது ஒரே யானை போல் தெரிகிறது. அதை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும் யானையை கட்டுப்படுத்த மேற்கு வங்காளத்தில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த 2021- 2022 இல் யானை தாக்கி மட்டும் சுமார் 133 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.