அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்!
அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டம் சசோனி என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஆற்றுப் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரேன தீப்பிடித்து இரண்டு நாட்களாக எரிந்து வருகிறது. இதை கண்ட கிராம மக்கள் பலர் அச்சத்துடன் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்தனர். ஆற்றங்கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்ட திரவ எண்ணெய் குழாயின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆயில் மற்றும் வாயுக்களை வேகமாக கொண்டு செல்வதற்காக பூமியில் ராட்சத பைப்புகளை புதைக்கின்றனர். இதன்மூலம் பல்வேறு ஆயில் நிறுவனங்களுக்கு தேவையான திரவ பொருட்கள் ராட்சத பைப்புகளின் மூலம் விரைவாக எடுத்துச் செல்லப்படுகிறது. சில நேரங்களில் பூமியின் வெப்பம் அதிகரிப்பதாலும் அல்லது குழாயில் அதிக அழுத்தம் ஏற்பட்டாலும் குழாய் வெடித்து அதிலுள்ள திரவம் வெளியேறிவிடும்.
அஸ்ஸாமில் ஆற்றின் கரைப்பகுதி பூமிக்கு அடியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் கசிவு ஏற்பட்டு ஆற்று நீருடன் ஆயில் கலந்து தீ பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உரிய நபர்களிடம் தகவல் தெரிவித்தும் இரண்டு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.