பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வினை நடத்த இறுதிகட்ட பணிகளை தேர்வு துறை தீவிரமாக நடத்தி வருகின்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். மேலும் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் பத்தாம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் ஒவ்வொரு பாடத்தேர்வு முடிந்த பிறகும் மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்துதான் திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் ஏழாம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்த பிறகு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளனர்.