திமுக ஜெயிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்! உடன்பிறப்பு சபதம்..!!
கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்கள் தமிழ்நாட்டில் எல்லா கட்சியிலும் உண்டு. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் திமுக கட்சியின் மீது தீராத பற்று கொண்டவர். தமிழக அரசியலில் எந்த சட்டமன்றத் தொகுதியும் ஒரு கட்சியின் கோட்டையாக இருக்க முடியாது.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்தது. திமுகவின் விசுவாசிகள் அதிகம் நிறைந்த சட்டமன்ற தொகுதியில் கலசப்பாக்கமும் ஒன்றாகும். ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த திமுகவின் அரசியல் பலம் கடந்த நான்கு தேர்தல்களாக சரிந்ததால் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்து திமுகவின் வெற்றிக்கனி தேர்தலின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்கு தொகுதி கொடுக்கப்பட்டதால் தொடர்ந்து திமுக தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் சமூக வலைதளங்களில் சூடு பிடித்து மக்களிடம் இருந்து உடனடி விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. திமுகவின் தொண்டர் காளியப்பனை பிற கட்சி தொண்டர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து கேலி செய்து வந்த காரணத்தால் காளியப்பன் வெறுப்பின் உச்சகட்டத்தை அடைந்து, தனது சட்டமன்ற தொகுதியில் திமுக எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போதுதான் காலில் செருப்பு போடுவேன் என்றும், அதுவரை செருப்பு போடாமல் வெறும் காலில் நடப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே பல ஆண்டுகளாக செருப்பு அணிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக் குழு பதவிக்கு போட்டியிட்டு காளியப்பன் வெற்றி பெற்றது ஒருபக்கம் இருந்தாலும், திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் காளியப்பனை செருப்பு போட சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.