என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறகட்டளையில் பரதம் இசை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கலாஷேத்ரா மாணவிகள் தெரிவித்து வரும் புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பணிபுரியும் 4 பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்களில் ஒருவரான ஹரிபத்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை ஒப்பு கொண்டார். இதற்கிடையில், காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஹரிபத்மனின் மனைவி திவ்யா தனது கணவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அங்கு பணிபுரியும் பெண் பேராசிரியர் இருவரின் காழ்புணர்ச்சியால் மாணவிகளை துண்டிவிட்டு தனது கணவர் மீது புகார் அளித்துள்ளதாகவும் அதனால், உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். ஹரிபத்மனே தனது குற்றத்தை ஒப்புகொண்ட நிலையில், அவரது மனைவியின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.