பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!!

Photo of author

By Savitha

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்!! தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!!

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் பொதிந்து விற்கப்படுவதால், பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது தொழிற்துறை செயலாளர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கெட்கள், மருந்து பொருட்கள் பிளாஸ்டிக்கில் பொதிந்து விற்கப்பட்டு வருவதால், உணவு பொருட்களை பிளாஸ்டிக்கில் பொதிந்து விற்க விலக்களிக்க மறுத்து, 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு பொருட்கள் சந்தையில் இல்லாததால், தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது எனவும், முழு அளவில் அமல்படுத்தினால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கும் எனவும் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், இது உள்ளூர் தொழில்கள் பாதித்து, வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆயிரம் பிளாஸ்டிக் ஆலைகளில், 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும், அவர்களில் 30 முதல் 35 சதவீதத்தினர் பெண்கள் எனவும், இந்த ஆலைகள் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பை வழங்குவதாகவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை இல்லாததால், அந்த மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவதால் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் இலட்சியம் வீழ்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை முழுமையாக அமலுக்கு வர 10 ஆண்டுகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதில் இருந்து உடனடியாக தடையை அமல்படுத்த முடியாது என்பது தெளிவாவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.