கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக செயல்பட்டு வருகிறார் எனவும், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக சட்டமன்றத்தையும் அதன் மாண்பையும் அவமானப்படுத்துகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, அரசால் இயற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம் என கூறி இருந்தது தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தன.
ஆளுநரின் இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக எழுந்ததை தொடர்ந்து, அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிரான ஒரு சிறப்பு தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கொண்டு வருகிறார்.
அந்த தீர்மானத்தில் தமிழக அரசு நிறைவேற்றுகின்ற தீர்மானங்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்திடவும், பொது வெளியில் பேரவையின் மாண்புகளை குறைக்கும் வகையில் அவர் நடந்து கொள்ள கூடாது எனவும் மத்திய அரசு மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் அறிவுரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்படும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.