ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ் நாடு- கேரளா முதலமைச்சர்கள் திட்டம்!!

0
217
#image_title

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு- கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

60 ஆண்டுகளாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 4.5 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் தான் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறுவது தவறு, இதற்காக முதன் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கியது இந்த துரைமுருகன் தான். இதுவரை அமைச்சர்கள் அளவில் 10 முறையும், அதிகாரிகள் 18 முறை என 28 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.

இதுவரை ஆனைமலையாறில் நாங்கள்தான் அணைக்கட்டுவோம் என்று உறுதியாக இருந்த கேரளா அரசு, தற்போது நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். ஆனைமலையாறில் இரண்டரை டிஎம்சி தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய கேரளா முதல்வர் நியாயமாக நடந்து கொள்கிறார். அவரிடம் மறுபடியும் பேச சொல்வோம்.

தற்போது தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி முடிவு கட்டலாம் என ஒரு யோசனை வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 109 கிலோமீட்டர் இந்த மேல்நீராறு தண்ணீர் பயணிக்கிறது. மடை விட்டு மடை பாசனம் என்ற இந்த திட்டம் எனக்கு மிகவும் பிடித்தமான திட்டம். இந்தியாவில் யாரும் செய்ய முடியாத ஒரு திட்டத்தை, மேற்கு நோக்கி செல்கின்ற நீரை திருப்பி 8 அணைகளுக்கு தண்ணீர் தரும் தனித்துவமிக்க திட்டம்.

காமராசர் காலத்தில் 58 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கலைஞர் அவர்கள் தான் இதற்கு திட்ட ஒப்புதல் கொடுத்திருந்தார். நம்முடைய பொறியாளர்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட இந்த திட்டம் அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு திட்டம்.

உறுப்பினர் ஜெயராமன் குறிப்பிட்டது போல இஸ்ரேல் மாடலில் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒரு குழுவை இஸ்ரேலுக்கு அனுப்பி அது எப்படி இருக்கின்றது என்று பார்த்து அதன் பின்பாக அதை செயல்படுத்தலாம் என ஒரு யோசனை எழுந்துள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Previous articleபுதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!
Next articleதங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கு கடத்திய பயணி!!