ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை! 

0
172
#image_title
ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை! 
தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் விநியோகிக்க வேண்டும், வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையை வசூலிக்க வேண்டும்.
புலம் பெயர்ந்து வந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பைக் கண்காணித்து, போதிய அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டுதிட்டப்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சில ரேஷன் கடை விற்பனையாளர்களை புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் அணுகும்போது, பல காரணங்களைக் கூறி, பொருட்களை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன. உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் மற்றும் பதிவாளரால் தக்க அறிவுரை வழங்கப்பட்ட பின்னரும், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும், அதைக் கண்காணிக்கத் தவறியதையும் இது சுட்டிக் காட்டுகிறது.
இந்த அறிவுரைகளை அனைத்து கீழ்நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்து, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது என்று பணியாளர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Previous articleகுட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!
Next articleதிமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா?