வாகன சோதனையில் இளைஞரின் மண்டை உடைப்பு! ஹெல்மெட் இல்லாத காரணத்தால் வில்லனாக மாறிய போலீஸ்..!!
சென்னை ஓட்டேரி பகுதியில் வழக்கம்போல வாகன சோதனையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்கிற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். சுரேந்தர் ஹெல்மெட் போடாத காரணத்தால் அபராதம் விதிப்பதாக போலீசார் கூறினர். இதைக் கேட்டதும் சுரேந்தர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு கூட்டம் கூடியது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாகி சிறப்பு ஆய்வாளர் கட்டையால் சுரேந்தரின் மண்டையை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுரேந்தரின் தலையில் ரத்தம் வடிந்த சம்பவத்தை பார்த்த மக்கள் கூட்டமாக சேர்ந்து போலீசாரை தாக்க முயன்றனர். இந்த பிரச்சினை குறித்து தகவலறிந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது சுரேந்தர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாத காரணத்தால் இளைஞரின் மண்டை உடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.