நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பு இதயமாகும். இது செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமா உயிர் வாழ முடியும். நமது இதயம் ஆரோக்கியமாக துடித்து கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.
சில நேரங்களில் அதாவது, திடீர் சந்தோசம், அதிர்ச்சி, எதிர்பாராத சம்பவங்கள், மன அழுத்தம் போன்ற தருணங்களில் நமது இதயம் துடிப்பதில் மாற்றம் ஏற்படும். இதய துடிப்பு மற்றும் அதன் ரிதம் சீராக இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் துடிக்கும். இது போன்ற நேரங்களில் வரும் மாற்றங்கள் இயல்பானவை.
ஆனால் நாம் சாதாரணமாக இருக்கும்போதும் இதய துடிப்பு ஒழுங்கற்று துடிப்பது அரித்மியா போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
அரித்மியா என்பது ஒழுங்கற்ற இதய துடிப்பாகும். இதய துடிப்புகளை ஒருங்கிணைக்கும் மின் சமிக்ஞைகள் சீராக வேலை செய்யாத நேரத்தில் அரித்மியா ஏற்பட்டு தவறான சமிக்ஞை இதயத்தை மிக வேகமாக அல்லது மிக மெதுவாக துடிக்க செய்கிறது. சில வகை அரித்மியாக்கள் பாதிப்பில்லாதவை. சில வகைகள் திடீர் மாரடைப்பை ஏற்படுத்தும்.
இதய துடிப்பு என்பது ஒரு மனிதனுக்கு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. இதய துடிப்பு ஒழுங்கற்று இருக்கும்போது மயக்கம், மூச்சு திணறல், அதிக வியர்வை போன்றவை ஏற்படும். மேலும் புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றாலும் அரித்மியா ஏற்படுகிறது. ஒழுங்கற்ற இதய துடிப்பு இரத்தத்தை சரியாக பம்ப் செய்யாது. இது ஆபத்தான நிலையாகும்.
அரித்மியாவை கண்டறிதல்
பல்வேறு வகையான அரித்மியாக்கள் உள்ளன. இவை ஈசிஜி அல்லது ஹோல்டர் கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியலாம். ஒழுங்கற்ற இதய துடிப்பின் தோற்றங்களை வைத்து அரித்மியாக்களை வகைப்படுத்தலாம்.
சில வகை அரித்மியாக்கள் மருந்தின் மூலமாகவும், சில வகைகளை அறுவை சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தலாம். இதற்கு சரியான நேரத்தில், சரியான சிகிச்சை அளிக்கப்படா விட்டால், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
நமது இதயத்தின் துடிப்பில் சிறிது மாற்றம் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் நம் இதயத்தை பாதுகாக்கலாம்.