36000 ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!
மேற்கு வங்கத்தில் 2011 முதல் மம்தா பானர்ஜி அவர்கள் முதலமைச்சராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு வழங்கிய பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது.
இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, அமலாக்கத்துறை அடையாளம் கூறிய, திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மானிக் பட்டச்சார்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், 36 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனால் காலியாகும் பணியிடங்களை 3 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த 36 ஆயிரம் ஆசிரியர்களும் 2014ல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, 2016 ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் 2016-17 கல்வியாண்டிலிருந்து வேலை செய்து வருகிறார்கள். இந்த தீர்ப்பு குறித்து பாஜக கூறியதாவது. இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு செய்த ஊழலின் ஆழத்தை இது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.