குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!

Photo of author

By Savitha

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!

கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஒரே நாளில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என்றால் பணியிடமாற்றம் செய்யபடும் என்று எம்.எல். ஏ ஊராட்சி செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த கழிவு நீர் கால்வாயின் பக்கவாட்டின் வழியாக கழிவு நீர் வெளியேறி ஊராட்சி சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யபடும் குழாய்கள் உடைந்துள்ளதால் கழிவு நீர் குடிநீர் செல்லும் குழாயில் கலந்து கிராம மக்களுக்கு செல்லும் குடிநீரில் கழிவு நீர் கலந்து குடிநீர் நிறம் மாறியும், புழுக்கள் கலந்த குடிநீர் விநியோகம் செய்ய படுவதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர்,வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவருடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல். ஏ செந்தில்குமாரிடம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் புழுக்கள் மற்றும் கழிவு நீர் கலந்த குடிநீரை காண்பித்து முறையிட்டனர்.மேலும் உடன் சென்ற ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்.எல். ஏ செந்தில்குமார் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் குடிநீர் செல்லும் குழாய்களை சீரமைத்து ஒரே நாளில் மக்களுக்கு கழிவு நீர் கலக்காமல் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.
இல்லையென்றால் பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து இந்த ஊராட்சியில் நீ இனிமேல் பணி செய்யமாட்டாய் என்று ஊராட்சி செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அப்பகுதி மக்களிடம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னுடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நடவடிக்கை எடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்து சென்றார்.