ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!!
புதுச்சேரி மாவட்டத்தில் ஓய்ட் டவுன் என்ற பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியானது புதுவை கடற்கரை பகுதியில் சாலையையொட்டி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளிக்கு ஆட்டோக்கள் மூலம் வருகின்றனர். அதில் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் என்ற பகுதியை சேர்ந்த 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு ஆட்டோவில் வந்தனர்.
மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விட்டது.இந்த சம்பவமானது புதுச்சேரியில் புஸ்ஸி என்ற வீதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகே நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் அந்த வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவிகள் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் போக்கவரத்து துறை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த சிறுமிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில் இரண்டு மாணவிகளுக்கு தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தலையில் காயமடைந்த அந்த இரண்டு மாணவிகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கை மற்றும் கால்களில் காயமடைந்த மற்ற மாணவிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. இந்த விபத்தால் மாணவிகளின் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாணவிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று மாணவிகளுக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.